நீ என்
பிரதி,
என்னின்
நீட்சி..
உன்னால்
என் வாழ்வை நீட்டிக்கிறேன்..
உன் வார்த்தைகள்,
பிரசுரமாவது
என் மூளையில்..
சில சமயம்,
'எனக்கே
எனக்கான கண்ணீர்,
எனக்கே
எனக்கான கோபம்,
ஒட்டிப்
பிறந்த அழகுணர்ச்சி,
நான்
படிக்கும் பாரதி,
ஒளித்துவைக்கும்
என் எழுத்துப்பிழை,
எங்கோ
நீளும் வானம்,
பாடஞ்சொல்லும்
சூழல்,
அள்ளிப்
பருகும் சுனைநீர்,
என் கர்வம்,
என் காதல்,
என் குரோதம்,
என் இறை..'
இத்தனையுமாய்
வீற்றிருந்தாய் என் எதிரில்,
எங்குமிதை
சொன்னதில்லை - அதில்
உன் செவியும்
அடங்கும்..
பாசம்
பீறிட்டு, உணர்ச்சிகள்
மூளை
குத்தி
உந்தப்
பெற்ற கைகளுடன்
உன் தலை
தொட்டுப்
பேச எத்தனிக்கையில்
தட்டிவிட்டு
முறைக்காதே
அத்தனை
பேருக்கும் அப்பாக்கியம்
நான்
கொடுப்பதில்லையம்மா..
முதன்முதலாய்
-
உன் பொக்குவாயில்
பிணைந்த
சோறு
கொடுக்கையில்
ஈரமானது
விரல்நுனி மட்டுமல்ல
என் மனதுந்தான்..
உன்னிடம்
கேட்கிறேன்,
'திடீரென்று
என் கரமெடுத்து
உன் தலை
சேர்ப்பாயா?
உன் மடி
சாய்ந்து முகநூல்
கண்டிட
அனுமதி தருவாயா?
உன் கன்னங்கிள்ளி
மூக்கில்
சேட்டை
செய்ய வரந்தருவாயா?'
உனக்குத்
தெரியுமா,
'இரவுப்
பாட்டு நீ,
பாடிடும்
பாடகர் நீ - செல்லமாய்
எனை அதட்டும்
என் அண்ணி
நீ,
பொறுமையாய்
என் புலம்பல்
கேட்கும்
ஒற்றை ஜீவன் நீ,
என் அன்னை
நீ,
என் பிள்ளை
நீ,
வாங்காத
மதிப்பெண் நீ,
வாங்கிடும்
மதிப்புகள் நீ..'
நீ என்
பிரதி,
என் நீட்சி,
உன் வாழ்நாளில்,
என் வாழ்க்கை நீடிக்கும்..
சுமக்கவில்லை,
பெற்றெடுக்கவில்லை,
பாலூட்டவில்லை...
மற்றபடி
- தள்ளிநிற்கும்
நானும்
உன் தாயே...!
For my Brother's Daughters.....
ReplyDelete