Friday, May 2, 2014

விடை பெறுகிறேன்..!

புதிதில்லை நிலையில்லை - புலம்பலெனும்
தேவை இல்லை.. 'விடை பெறுகிறேன்'

அனுப்புனர் பெறுநர் முகவரி இல்லாமல்
காற்றில் மிதக்கும்
'மன்னிப்புகளும்' 'நன்றிகளும்'
உரிய இடஞ்சேர
உரிய தருணமிது..

ஒரு தருணம்
சிறைபட்ட நபராய்
வெளியேற ஆசை..
மறு தருணம்
வேலிக்குள் பயிராய்
இருந்துவிட ஆசை..

வளர்ந்த பயிர் வலுவூன்றி
நின்ற பின் - வளர்பயிர்க்கு
வழிவிட்டு விலகிடும்
நேரமிது..

இருந்தாலும்
தேங்கிய நிகழ்வுகள்
உரமாய் இந்த மண்ணில்
விட்டுச் செல்ல ஆசை..


அன்றொரு நாள்
தாய் கரம்பிடித்து
தகப்பன் கால் மறைந்து
எட்டிப் பார்த்த பள்ளியே..
உள்ளே வருவதற்கு
அன்று அழுதேன்..
உன்னை பிரிவதற்கு
இன்று கலங்குகிறேன்..
அன்றைய அழுகைக்காய் - என்
           முதல் மன்னிப்பு உன்னிடத்தில்..
இன்றைய தெளிவிற்காய் - என்
            முதல் நன்றி உன்னிடத்தில்..

அன்றொரு நாள்
அழுதழுது தேம்பி
அன்னை தேடையிலே
பக்குவமாய் அருகமர்ந்து
எனை தேற்றினீரே..
என் முதல் ஆசிரியையே - என்
இரண்டாம் தாயே..
உங்களின் கரம்
விலக்கி விட்டதற்காய் - இன்று
             கேட்கிறேன் மன்னிப்பு உங்களிடம்..
அப்பொழுதும் அரவணைத்ததற்காய் - அன்றைக்கான
             என் நன்றிகள் உங்களுக்கு..

அன்றொரு நாள்
தெளிவின்றி வந்தேன்
அறிவின்றி வந்தேன்
பாடம் சொன்னீர்
பகிகுவம் சொன்னீர் - எமை
வளர்த்து விட்டீர் - நிங்கள்
சக்திவிரயம் மறந்து வகுப்பில் உறங்கியதற்காய்
              சோம்பலான எங்களின் மன்னிப்புகள்..
அதட்டிவிட்டு அதை மறந்து சென்றதற்காய்
               விழித்துவிட்ட எங்களின் நன்றிகள்..

எல்லாம் கூறிவிட்டேன்
எல்லாரையும் கூறிவிட்டேன்
எப்படி கூறுவேன்
இதை மட்டும்..
அழுகாமல் கூறிடத்தான் ஆசை..

அன்றொரு நாள்
'அம்மாவைக் காணவில்லை எனும்போதும்..
அப்பா திட்டினார்கள் எனும்போதும்..
டீச்சர் அடித்தார்கள் எனும்போதும் - அந்தப்
பொண்ணுடன் சண்டை எனும்போதும்..
மயக்கமுற்று கிரங்கும் போதும் - தலையில்
பேன் ஆயும் போதும் - அவிழ்ந்த
ரிப்பன் கட்டும் போதும்
புத்தகந்தாண்டி போதித்த போதும்
புன்னகை பதில் கூறும் போதும்..'

தோழியே..
மன்னிப்புகளும் நன்றிகளும்
மாற்றிமாற்றி பலமுறை
சொல்லிக்கொள்ள வேண்டும்
நீயும் நானும்..
சொல்லிக் கொண்டிருந்தால்
நீயும் நானும்
என்றாகிப் போவோம்
'நாம்' மறந்து..

வேறு ஒன்று சொல்கிறேன்
ஒரே கல்லூரியில் - இடம்
கிடைக்குமா தெரியாது..
உரே ஊரில்
வாழ்வோமோ தெரியாது..

அதனால்
இத்தனை நாள்
பாசம் நேசம்
பகிர்ந்த உணவு
புத்தியற்ற கோபம்
பக்கத்து இருக்கை
சுற்றுலாவின் கடன்..

அத்தனைக்குமாய்
உன் மடி சாய்ந்து கண்ணீர் தருகிறேன்
பத்திரப் படுத்திக் கொள்..

அடுத்தமுறை
காணும் வரை அவசியம் தேவைப்படும்

இக்கணம் 'விடைபெறுகிறேன்..'

No comments:

Post a Comment