Tuesday, May 6, 2014

உயிரின் துடிப்பு..!

உயிரின் துடிப்பு..!
-------------------------

ஐயய்யோ
ஆழமான ஒப்பாரி எனைச் சுற்றி,
என் உயிருக்கும் உடலுக்கும் சண்டை,
விட்டுக்கொடுக்க விரும்பா உடல்,
விட்டுப்போகத் துடிக்கும் உயிர்..

மெதுவாய்
என் செவி நெருங்கி,
வேகமாய் இறந்துவிடு, எனக்கு
வேலை இருக்கிறது
சொன்னான் அந்த ஆசாமி..
அன்றொரு நாள் மற்றவன்
காதில் நான் ஓதியது..

இங்கு தான்
துடிக்கிறது மனம் வாழ்வை அனுபவிக்க
தேடித்தேடிப் பார்க்கிறேன் வாழ்வை,

கேவலம்,
ஒரு பொழுதேனும் எனையுணர்ந்து வாழ்ந்ததில்லை,
உயிர்பால் கொடுத்த அன்னை - வெறும்
முலைப்பால் கொடுத்தவளாய் தோன்றினாள்..
அழகிய மனையாளிடம் - விபச்சாரி
நாடுபவனாய் வெறும் உடல்மட்டும் ஈந்தேன்
குழந்தையின் அழகிய எச்சில் முத்தம்,
அன்றைய வரவுக்கணக்கில் இடம்பெறும் அன்றாடம்..
தோழமையின் வருடல் - வேண்டாமல்
செடியை அசைக்கும் தென்றல் போல் எனக்கு..

ஏங்கி, ஏங்கி
உளறல் வார்த்தையில் நான் கேட்கிறேன் - ஒரு
இரவல் முத்தம் என் குழந்தையிடம் இன்று..
ஏங்கும் உயிர் பிரிய பாலூட்ட வருகிறான்
என்னருகில்..
வாழ்ந்த காலமெல்லாம் உயிர்கொண்ட உலோகம்,
பார்த்தல், பேசுதல்,
கேட்டல், நுகர்தல், உணர்தல்,
கொண்டிருந்ததால்
நன் மேம்பட்ட எந்திரம் அதாவது எந்திரன்

கதறி அழுதிட துடிகிறேன்,
என் வாழ்வை நானன்றி - வேறு எவரெல்லாமோ
வாழ்ந்திருக்கிறார்..

என் முதலாளி அவனும் ஆண்டேதான்,
என் கடவுள் அவனும் ஆண்டேதான்,
என் மதங்கள், அதுவும் ஆண்டேதான்,
நான் மட்டும் - எனையறியா அடிமை..

இக்கணம் வருந்துகிறேன்
சுரண்டப்பட்ட என் உழைப்பையெல்லாம்
நினைந்து, நினைந்து இக்கணம் வருந்துகிறேன்
மேகத்தின் கொட்டும் வெள்ளை
வியர்வையில் நனைந்ததில்லை..

ஒரு நாளேனும் -
நிர்வாணமாய் நீரடவில்லை
ஒரு பொழுதேனும் -
என் குழந்தைக்கு
கால் பிடித்துவிட்டதில்லை..
அத்தனை அவசரம்
எங்கு, ஏன், எதற்கு?
அன்றைய அன்றாடங்களே என் பணி தீர்மானிக்கும்..

எண்ணெய் ஊற்றாமல்,
இற்றுப்போன இரும்புச்சக்கரம்மாய்,
எனையறியாமல் - எனை கவனிக்காமல்
உயிர் இற்று சுழன்று காலங்கள்
இன்றுவரை ஏன் என்று தெரியவில்லை..

முழுதாய் அறுபது வருடங்கள்
ஓடியபின்,
இன்று என்னுள் உறுத்தி,
எனை அனுபவிக்கத் தூண்டுகிறதே
என் வாழ்வை..

நான் பிழைத்து வருவேன்
என்னிடம் நானே மன்னிப்பு கேட்டு,
மீண்டும் முதலிருந்து,
அனுபவித்து மனிதனாய்
வாழ்ந்திடுவேன்.....

Friday, May 2, 2014

என் மகளே..!

நீ என் பிரதி,
என்னின் நீட்சி..
உன்னால் என் வாழ்வை நீட்டிக்கிறேன்..
உன் வார்த்தைகள், பிரசுரமாவது
என் மூளையில்..

சில சமயம்,
'எனக்கே எனக்கான கண்ணீர்,
எனக்கே எனக்கான கோபம்,
ஒட்டிப் பிறந்த அழகுணர்ச்சி,
நான் படிக்கும் பாரதி,
ஒளித்துவைக்கும் என் எழுத்துப்பிழை,
எங்கோ நீளும் வானம்,
பாடஞ்சொல்லும் சூழல்,
அள்ளிப் பருகும் சுனைநீர்,
என் கர்வம், என் காதல்,
என் குரோதம், என் இறை..'

இத்தனையுமாய் வீற்றிருந்தாய் என் எதிரில்,
எங்குமிதை சொன்னதில்லை - அதில்
உன் செவியும் அடங்கும்..

பாசம் பீறிட்டு, உணர்ச்சிகள்
மூளை குத்தி
உந்தப் பெற்ற கைகளுடன்
உன் தலை
தொட்டுப் பேச எத்தனிக்கையில்
தட்டிவிட்டு முறைக்காதே
அத்தனை பேருக்கும் அப்பாக்கியம்
நான் கொடுப்பதில்லையம்மா..

முதன்முதலாய் -
உன் பொக்குவாயில் பிணைந்த
சோறு கொடுக்கையில்
ஈரமானது விரல்நுனி மட்டுமல்ல
என் மனதுந்தான்..

உன்னிடம் கேட்கிறேன்,

'திடீரென்று என் கரமெடுத்து
உன் தலை சேர்ப்பாயா?
உன் மடி சாய்ந்து முகநூல்
கண்டிட அனுமதி தருவாயா?
உன் கன்னங்கிள்ளி மூக்கில்
சேட்டை செய்ய வரந்தருவாயா?'

உனக்குத் தெரியுமா,

'இரவுப் பாட்டு நீ,
பாடிடும் பாடகர் நீ - செல்லமாய்
எனை அதட்டும்
என் அண்ணி நீ,
பொறுமையாய் என் புலம்பல்
கேட்கும் ஒற்றை ஜீவன் நீ,
என் அன்னை நீ,
என் பிள்ளை நீ,
வாங்காத மதிப்பெண் நீ,
வாங்கிடும் மதிப்புகள் நீ..'

நீ என் பிரதி,
என் நீட்சி,
உன் வாழ்நாளில், என் வாழ்க்கை நீடிக்கும்..

சுமக்கவில்லை, பெற்றெடுக்கவில்லை,
பாலூட்டவில்லை...
மற்றபடி - தள்ளிநிற்கும்

நானும் உன் தாயே...!

குழந்தைகள்...

இவர்கள் துறவிகள் - ஆசைப்படும்
அழகிய துறவிகள்...
பேதமின்றி எல்லாம் சமமாய்
பார்க்கும் ஆசைகொண்ட துறவிகள்...
பாவம்,
ஆசைமீறிவிடுவதால் மனிதனாகிவிடுகிறார்கள்
வளர்ந்த பின்..

எதுவும் தெரியாதென்று
ஒப்புக் கொள்ளும் விஞ்ஞானிகள்,
உன்னை என்னைப் போல்
தெரியுமென்று கண்மூடி
அறிவுக்கதவு அடைத்தவர்களல்லர்..
தெரியாதென்று தெரியவிளையும்
ஆசை படிப்பாளிகள்...

யோசித்ததுண்டா?
நீ உன் தேடல் நிறுத்தியதால்,
குழந்தைகளின் கேள்விக்கு தடைவிதித்ததை?

வழிந்து நிறையும் - வானமழையில்
நோய் மறந்து ஆடும்
தேவதைகள்...
வரப்போகும் இசிவின் இஷ்டமின்றி
விளையாடும் தெய்வங்கள்...

தூக்கத்திலும் தோழமை
விடாமல் ஆடிப்பாடி
கனவிலும் கவலையில்லா,
ஆசைப்படும் துறவிகள்...

அந்தச் சிரிப்பு - சிரிப்பு
மாத்திரம் கொண்டது...
நேற்று 'கா' விட்ட எதிரியுடன்
இன்று 'பழம்' விட்டு விளையாடும்
புண்ணிய ஆத்மாக்கள்...

நேற்றைய பேச்சில்லை,
நாளைய நினைப்பில்லை - இன்று
இக்கணம் வாழும் - 'ஜென்
சித்தாந்தத்தின்' துடிப்புள்ள
முழு உதாரணம்...

கனவில் அழுவது - கஷ்டத்தால்
இல்லை,
அவர்கள் விளையாட்டின் - மீதான
உங்கள் தடை உத்தரவால்...
நிஜத்தில் அழுவது - பிடிவாதத்தால்
இல்லை,
தங்களின் பிடித்த மடி - உங்களின்
வேலைகளால் தூரப் போவதால்...



குழந்தைகள் எல்லாம் சமம் தான்,
மேகங்கள் போல்,
இது சிறிது, இது பெரிதென்று
கூற ஒவ்வுமோ?
அவர்கள் மழை மட்டுமே தருவர்
மகிழ்ச்சியாய் - அனைவருக்கும்....

அவர்கள் கனவு பெரிது,
புன்னகை உண்மை,
வாக்கு சுத்தம்,
சக்தி கடல்,
அறிவு மூங்கில்- உங்கள்
கனவு கொல்லப்பட்டதற்காய்
அவர்கள் கனவு
தடைசெய்யப்பட்ட பகுதி
ஆக வேண்டாம்...!

அவர்கள் அவர்களாய் இருக்கும்
வரை அவர்கள் புண்ணியாத்மாக்கள்..!
உங்களின் 'வாழ்வியல்' மேலேறினால்
கூழாங்கற்களின் கூட்டத்தில் தொலையும்
       'மாணிக்கப் பரல்கள்..'

அண்ணனுக்கு வயசாச்சு..!

(என் அண்ணனை பற்றி முதன்முதலாய் இன்று நான் எழுதியது.. அவனுக்கு வயசானதை(வதை) சிறுவனாய் கோபத்துடன் எதிர்க்கிறேன்..)

                  
உச்சி வகுடெடுக்கா தலை
நெத்தியில திட்டா திருநீறு
அளந்து ஊத்துன எண்ணெய்தலை
பென்சில் கோட்ட விட
கொஞ்சம் பெறுத்த உடம்பு
முன்னிரு பல் மோதி
சிங்கப்பல் வெளிய நிக்கும்

வாயெல்லாம் பொய் அவனுக்கு
ஏமாத்துதான் அவன் வேலை
வெளிய தெரியாது
பொய் அவன் சொல்வான்னு

ரதிமீனா பஸ்ஸ மெயின்ரோட்டில்
பாத்தேனு சொல்லுவான்
ராஜீவ் காந்தி பஸ்ஸ டவுண் பஸ்
முந்திச்சுனு சொல்லுவான்
'
செல்ஃப்' ஏறி காசெடுத்து ரஸ்னா
வாங்கித் தருவான்
பிடிபட்டு சிக்கயில எனை விட்டு
ஓடி மறைஞ்சு போவான்

அருணாச்சலம் படத்த எனைவிட்டு
திருச்சி மாமாவோட பார்த்தாலும் - நான்
ஒரு வாரம் காக்கா பிடிச்சும்
கதை சொல்லமாட்டேனு ஓடுனான்
தோட்டத்துல சாட்ச்சியில்லாம தனியா
கிரிக்கெட் ஆடயில - நான்
பவுலிங் போட்டு முடிச்சதும்
பாத்ரூம் வருதுனு ஓடிடுவான்

ஒளிஞ்சு பிடிச்சு விளையாடைல - நான்
எங்க போய் ஒளிவேன்னு அவனுக்கு
மட்டுந் தெரியும்
எப்பவும் எனக்கு எதிர்டீம் தான்
என்னை காட்டிக் கொடுக்க அவன் தான்

'UNDERTAKER'-
க்கு ஏழு உசுருனு கதை
சொன்னதும் அவன் தான்
'KANE'-
நிஜமாவே பேய்னு கதை
சொன்னதும் அவன் தான்

சைக்கில் அவன் தானா ஓட்டுனதும்
தண்டோரா போட்டுகிட்டே பின்னால - நானும்
ஓடுனது மறக்கல..
'
டபுள்ஸ்' ஏத்திட்டு என்னோட அவனும்
தெருவுல விழுந்ததும்..
எந்திரிச்சு 'கெக்கபிக்கனு' சிரிச்சு
தெருவுல சைக்கிலோட நடந்தது
நான் மறக்கல..

காக்கி உடுப்பு, கருப்பு 'பூட்', கையில
கோடாலி ஸ்கேலோட - அடுத்த ஊர்
காலேஜுக்கு - அவன் படிக்கப் போனது மறக்கல..

வெளியூர் வேலைக்குப் போய் - எனக்கு
சட்டை வாங்கியாந்தது மறக்கல..

ஏதேதோ சாதகம், பொண்ணு போட்டோ,
அண்ணண் போட்டோ - பலர் கை
மாறி வந்தது.... 'ஏன்-னு' தெரியல..

'
ஏன்-னு' நானும் யோசிக்கயில
மறந்தது என் புத்தி வந்தது,

'
அண்ணனுக்கு வயசாச்சு' - அவனோட
ஓடியாடி திரிஞ்ச 'எனக்கும் 24 வயசாச்சு'..